12/30/2025

மின்னிதழ் 23

மேலேயுள்ள மார்ச் – ஏப்ரல் 2024 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!

பெண் எனும் பேராற்றல்

உரத்த தொனியில் பேசாள்
உள்ளமைதி கொள்வாள்
பொறுத்த பூமாதேவி ஒக்கும்
திறத்தை உடைத்த பூவாள்


மறைத்த தீவிர மனதாள்
மௌன முகவரி தருவாள்
மிகைத்து எழுந்திடும் தீயாய்
மண்ணில் வெற்றி பெறுவாள்


மணக்கும் பூமொழி உடையாள்
கணக்கில் தியாகத் தருவாள்
இனிக்கும் இல்லறம் புரிவாள்
தனக்கென வாழாத் தகையாள்


காற்றை ஒத்த காரிகை
வெற்றிடம் நிரப்பும் வித்தகி
சுழலும் புயலாய் உயர்ந்து
சரிதம் படைக்கும் வல்லாள்


உடைக்கும் உளியாய் செயலி
தடைக்கல் அகற்றும் விறலி
விடைக்கும் துடிப்பின் பிறவி
சுடர்விழி எரிக்கும் கனலி


பாரதியின் பிரியப் பெண்ணவள்
பகுத்தறிவின் அழகுக் கண்ணவள்
பொங்கும் கடலலை போன்றவள்
கங்குலில் அவிழும் நிலவவள்


வீரத்தில் முளைத்த வனிதை
விடியலின் கதிராகும் புனிதை
விழிகளால் அகிலம் உய்ப்பவள்
கலியெலாம் போக்கிட விளைந்தவள்


பேருற்றாய்க் கிளம்பி வந்தவள்
பெருவெற்றி சமைத்திடத் துணிந்தவள்
பேரானந்தம் தந்திடும் நல்லவள்
பிறர்நலனுக்காய் வாழப் பிறந்தனள்


அடங்காத ஆக்ரோஷம் அவளே
அடங்கிடும் அகிம்சையும் அவளே
இலட்சியம் வெல்லும் மாயவள்
அலட்சியம் காணாத் தூயவள்


பேராற்றல் கொண்ட பெண்ணவள்
பேடிமைத்தனம் களையும் தாயவள்
எல்லையில்லாக் கனவின் தோணியாள்
ஏற்றமிகு புகழின் ஏணியாள்


சிரிக்கும் எழிலின் சோதி
சீதள நெஞ்சத்தின் பரிதி
மகா ஞானத்தின் நிகரி
மகத்தான மாற்றத்தின் அதிதி

Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர், இலங்கை