12/30/2025

எண்ணமடை திறந்தது

தமிழ்நெஞ்சம் அமின், பிரான்சு

இன்னதடை என்பதனை மறந்து
எத்தனையோ சேர்த்துமனம் நிறைந்து
எண்ணமடை திறந்ததினால் நானும்
எழுதுகிறேன்! எழுத்தூறும் தேனும்!

வண்ணவுடை பெண்ணொருத்தி கண்டு!
வடிவழகை அள்ளிமணம் உண்டு!
பின்னுசடை அரவமெனத் தொங்கும்!
பின்னழகில் என்றனுயிர் தங்கும்!

சின்னயிடைப் பெண்ணழகைத் தாங்கும்!
சிந்தையதைத் தினமெண்ணி ஏங்கும்!
அன்னநடை காட்டிநடம் ஆடும்!
அவளழகைக் குயிலினங்கள் பாடும்

கன்னிவுடல் பொன்னிறத்தைக் காட்டும்!
கவியுள்ளம் கற்பனையை நாட்டும்!
உண்ணத்தடை போடுவதேன் நெஞ்சம்!
உடல்முழுதும் வெப்பநிலை விஞ்சும்!