12/22/2024

உறவே உயிரே

ராம்க்ருஷ்

மலருக்கு மலர் கொடுத்துத் தொடங்கிய காதல்
புலரும் காலைப் பொழுதாய் என்றுமுள்ள காதல்
மலரும் மலர்களிலெல்லாம் தோன்றும் முகமே
நிலவும் வானும் போலே ஒட்டி உறவாடும் காதல்

காதல் உறவில் தோன்றிய என்னுயிரே உணர்வே
சாதல் வரை தொடரும் இது அன்புக் காதலாகுமே
நாதம் இசையாய் நாடி நரம்பெல்லாம் இசைக்குமே
பாதம் முதல் முடி வரை உணரும் அன்புக் காதலிது

உயிரில் உயிராய் ஒன்றிணைந்து உருகிய அன்பே
தயிரில் வெண்ணெய் போல் நானிருப்பேன் மலரே
அயிரை மீனைப்போல் ருசிக்கும் உறவில் வந்தது
துயிலிலும் விட்டுப் போகாத காதல் கனவுகளாய்

உறையும் இதயம் உன்னிதயத்தோடு ஒன்றாகும்
மறையும் காதல் இதயச் சுவற்றுக்குள்ளே இனிதாக
இறையும் இதற்குப் பாதுகாப்புகள் செய்து உதவும்
முறையான உண்மைக் காதலிது உயிரானதே.

நீயின்றி நானில்லை இவ்வுலகில் என்றென்றும்
காயின்றி கனியேதும் கனிந்ததுண்டா உலகில்
தாயின்றி சேயொன்று உலகில் உதித்ததுண்டா
வாயின்றி வயிறு நிறைந்ததில்லை உறவே உயிரே.