12/22/2024

இமயமாய் உயர்ந்து நிற்கிறாய்

தமிழன்னை வளர்த்த தமிழ்நெஞ்சமே
தமிழ்ப்புலமைகள் அனைத்தும் உன்னிடம் தஞ்சமே
அன்னைத்தமிழால் உனக்குப் பெருமை
அன்புத் தமிழ்நெஞ்சத்தால் தமிழுக்கே பெருமை

கட்டவிழும் கன்னித்தமிழ் கொண்டு
கவி புனைகிறாய் கவின்மிகு வரிகளோடு
அன்பென வருவோர்க்கெல்லாம் அமுதசுரபி நீ
ஆறுதல் தேடுவோர்க்கு அற்புத ஔடதமும் நீ

உன் அகக்கண்களெங்கும் அன்பின் ஊற்று
அழகிய வதனமெங்கும் அமைதியின் ஒளிக்கீற்று
பைந்தமிழின் ஈர்ப்பு உன்னுள் விசையேற்ற
பற்றுக் கொண்டோரை ஈர்க்கிறாய் தமிழ்த்தொண்டாற்ற

விடாமுயற்சியும் பயிற்சியும் கொண்டு – உன்
வெற்றிக்கிட்டாய் உறுதியாய் அடித்தளம்
திறமையுள்ளோரை அரவணைத்து அமைத்துக்
கொடுத்தாய் அவர்கட்குச் சிறப்புக்களம்

எத்திசைப் பறவைகட்கும் வேடந்தாங்கலாய் நீ
எங்கும் நிழல் தேடியலைவோர்க்கும் பெருவிருட்சம் நீ
அடரிருளில் தொலைவோர்க்கு ஒளிவிளக்காய் நீ
கரைகாணா கவிஞர்க்கும் கலங்கரை விளக்காய் நீ

எட்டமுடியா இலக்குடையோரை ஏற்றிவிடும் ஏணியே
ஏங்கும் கலைஞரையும் கரை சேர்க்கும் தோணியே
அகில மெங்கும் போற்றும் ஞானியே
உன் அகத்தில் உறைகிறாள் கலைவாணியே

வெஞ்சொல் கேட்டால் அனிச்சமலராய் வாடுவாய்
வெறுப்பு துரோகம் கண்டால் தள்ளியே ஓடுவாய்
அன்பு கொள்வோர்க்கு நறுமலராய் வாழுவாய்
உயர்பண்புகளால் உலகையே ஆளுவாய்

மாயக்கண்ணனாய் வந்து மங்கையர் மனங்களில்
மெல்ல மெல்லத் தடம் பதிக்கிறாய்
மிடுக்காக வந்து உலாப் போகிறாய்
மிளிரும் (கவி) மார்க்கண்டேயனாய்

உன் நகக்கண்ணில் கூட கவி பூக்கும்
உன் சுவாசக்காற்றிலும் தமிழ் மணக்கும்
இந்த தரணியையே கட்டிப்போடும்
தனித் திறமைகள் உண்டு உனக்கும்

இயற்கையின் வனப்புகள் சந்தம் பாட
இன்னிசைக்குயிலோ உனக்குச் சிந்து பாடும்
விண்மீன்கள் கண்சிமிட்டிக் கவரி வீச
வெண்ணிலவோ உன் சிரசேறி மகுடமாகும்

அத்தனை மொழிகளிலும் தேடுகிறேனொரு வார்த்தை
உன் அன்புமொழிக்கீடாக வசப்படவில்லை ஏதும்
ஒருமையில் விளித்தாலும் உனை எப்போதும்
இமயமாய் உயர்ந்து நிற்கிறா யென்னுள்

முப்பத்து முக்கோடித் தேவர்கள் (வானவர்கள்)
உன்னாயுள் ரேகையில் காத்து நிற்க
நல்லோரின் ஆசிகளுனை வாழ்த்த
நலம் வாழ வேண்டுமென்றும் நீடூழி

சித்தி வஃபீரா