தமிழ்நெஞ்சம் அமின்
நறுமலரே ! என்னுறவே
நலம்தானா ? பெண்ணழகே
ஒருயுகம்போ லானதடி
உன்னுடனே யான்பழகி
பொறுமையெனும் சொல்லுக்குப்
பொருளாகிக் காத்திருக்கேன் !
மருமகளாய் என்தாய்க்கு
வருவதென்று என்னவளே ?
மொழிகின்ற பேச்சினிலே
முல்லைமலர்த் தேன்சொரிவாய் !
விழியென்றக் கருவண்டை
வீசிடுவாய் மயங்கிடுவேன் !
அழிவில்லாப் பொற்றமிழே
அறிவாயோ என்னிலமை ?
அருகினிலே இறுத்திவைத்து
அருங்கவிகள் படைத்திட வா..
தந்தைதாய் அறிந்துவிட்டார்
தடைமேலும் தந்துவிட்டார்
சிந்தையெலாம் நொந்ததடி
சின்னவளே உன்னில்லம்
வந்திடவே என்னுள்ளம்
நாளெல்லாம் எண்ணுதடி
எந்நாள் வந்திடலாம்
என்னவளே சொல்கண்ணே !
கற்றதமிழ் பயனாகயான்
கவிபாடி அழைக்கின்றேன்
பெற்றவர்சூழ் பெண்ணிலவே
பெருவாழ்வைக் கண்டிடவே
உற்றதுணை நானிருக்கேன்
உள்ளத்தில் பயமேனோ ?
வற்றாத சுனைநீரே
மடிதன்னில் ஆடிடவா !
