12/22/2024

பிரார்த்தனை

பாவேந்தல் பாலமுனை பாறூக்

ஊரடங்கு இல்லையிது உலக டங்கு!
ஒருசிறிய கிருமியதன் தாக்கத் தாலே
பேரழிவு,பெருந்துயரம்.. பெருமை யெங்கே?

வல்லரசும் புல்லரசாய் மாறிப் போச்சே!
வளர்ந்திட்ட நாடுகளும் வறிய நாடும்
சொல்லொண்ணாத் துயரத்தில் மூழ்கிப் போச்சே!
சொல்லிடத்தான் யாருண்டு? உயிர்கள் போச்சே!

மதமெங்கே நிறமெங்கே சாதி யெங்கே?
மதில்கட்டிப் பிரித்தவர்தம் மமதை யெங்கே?
மார்க்கத்தை வழிமுறையைத் தவற விட்டு
மதம்பிடித் தலைந்திட்ட கூட்ட மெங்கே?
எதுபிழையோ? எதுதவறோ? எதனால் தானோ
இச்சிறிய வைரஸெமைத் தாக்கிற் றிங்கே!

ஒருசிறிய “கொரொணா” வை ஏவி விட்டு
ஓரிறையே எமையெல்லாம் சோதித் தானோ?
ஒன்றுஇறை, ஒன்றுகுலம் என்றிட் டானோ?
ஒன்றுமறி யாதிருந்து வருந்து கின்றோம்!

அகமிருண்டு வாழ்ந்திட்ட வாழ்க்கை யாலோ
அனைவரையும் இடைவெளியில் பிரித்து வைத்தான்?
முகம்மலர்ந்து பேசாத உறவு கண்டோ
முகமூடி மனிதர்களாய் ஆக்கி விட்டான்?

எதுதவறோ எதுபிழையோ அறிந்தோ மில்லை
இறையோனே உனைத்தவிர எவரு மில்லை!
எம்பிழைகள் பொறுத்திடுவாய்,நோயை நீக்கு!