நிஷா ரஹ்மான்
வாழும் நாட்கள் ஒவ்வொன்றும் கடவுள் நமக்குக் கொடுத்த வரம்.
நமக்கான வரங்களை கேட்டு வாங்கிக் கொள்ளவே இவ்வாழ்க்கை.சாபங்களை வரவேற்காமல் சந்தோஷங் களுக்கு வழி அமைப்போம். நம்முடைய உள் மனத்தின் அமைதிக்கான சாவி வேறெங்கும் இல்லை, நம் கைகளில் தான் உள்ளது. திறப்பதும், மறுப்பதும் நம் விருப்பம்.
நேர்மறை எண்ணங்களுடன் இருந்தால், எத்தகைய பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்து மீண்டு(ம்) வரலாம்.
மனம் நிலைகொள்ளாமல் தவிக்கும் போதும், உள்ளுக்குள் ஆழமான ஒரு காயத்தால் ஏற்பட்ட வலி சற்றும் குறையாமல் இருக்கும் போதும் என்ன செய்யலாம்?
மனதைத் திசை திருப்புங்கள்.
உங்களை அறியாமலே சிறுகச் சிறுக எதிர்மறை எண்ணங்களை வளர விட்டிருப்பீர்கள். அவற்றை முதலில் உங்கள் மனதில் இருந்து முற்று முழுதாக நீக்கிவிடுங்கள்.
நீங்கள் என்ன சொன்னாலும் காது கொடுத்துக் கேட்க கூடிய நெருங்கிய நண்பரோ உறவினரோ இருந்தால் அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.
வளர்ப்புப் பிராணி வீட்டில் இருந்தால் அவற்றுடன் அதிக நேரம் செலவிடுங்கள்.
உடற்பயிற்சி அல்லது பூங்கா விற்குச் சென்று நடைபயிற்சி செய்யத் தொடங்குங்கள்.
புது வகையான உணவை சமைத்து சாப்பிடுங்கள்.
புதிய எந்த விஷயத்தையாவது கற்றுக் கொள்ளுங்கள்.
உங்களால் முடிந்தால் மற்றவர் களுக்குச் சொல்லிக் கொடுங்கள்
நல்ல சொற்பொழிவுகளை செவி மடுத்துக் கேளுங்கள்.
இனிப்பு பலகாரங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
இவை எல்லாம் வாழ்தலுக் கான பற்றினை உங்களுக்கு ஏற் படுத்தும். பழைய நினைவுகள் காலப் போக்கில் மறையத் தொடங்கி மனத் தில் உற்சாகம் மீண்டும் வரும்.
சும்மா இருக்காதீர்கள். சும்மா இருக்கும் மனது சாத்தானின் பள்ளிக்கூடம்.
ஏதாவது மனதிற்கு பிடித்த வேலைகளில் ஈடுபடுவது நன்று. சிறந்த புத்தகங்களை வாசிக்கலாம்.கலையார்வம் உள்ளவர்கள் அதற்கான பணிகளில் கவனம் செலுத்தலாம். வீட்டு வேலைகள் வீட்டுத் தோட்டம் இப்படி ஏதாவது ஒன்றில் மனதை ஈடுபடுத்தலாம்.
வாழ்வில் இழப்புகள், துயரங்கள், பிரச்சினைகள் என்பன தவிர்க்க முடியா தவை என்று புரிந்து கொள்ளுங்கள்.
எனவே உணர்ச்சிகளை வருத்தும் நிகழ்வுகளில் மனதைத் தளர விடாதீர்கள். காலப்போக்கில் காயங்கள் மாறிவிடும்.
பயணம் செய்யுங்கள். மனதுக்கு மகிழ்வளிக்கும் சில விஷயங்களுள் ஒன்று, இயற்கையுடன் சற்று நேரம் மனம் ஒன்றியிருப்பதுதான். அருவி, மலைச் சாரல், கடல், தொன்மையான கட்டிடங்கள், கோவில் கோபுரங்கள், ஸ்தூபிகள் போன்ற அழகியல் விஷயங்களில் ஈடுபடுகையில் மனம் எதிர்மறையாகச் செல்லாமல் நேராக இயங்கும்.
நம்மை மீறிய சக்தியான இயற்கையை தரிசிக்கும் போது, மனித வாழ்க்கை எவ்வளவு குறுகியது என்று நினைத்து வாழும் காலம் வரை வாழ்க்கையை இனிமையாக கழிக்கத் தோன்றும்.
பயணம் மனதை விசால மாக்கும். எண்ணங்களை விரிவடையச் செய்யும். குறிப்பிட்ட வாழ்வியல், சூழல்களில் சலித்துப் போன மனதுக்கு ஒத்தடம் அளித்து மீண்டும் உற்சாகமாக பயணம் செய்யத் தூண்டுகோலாக இருக்கும் .
எதிர்மறை எண்ணங்களை போக்குவது துணியைத் துவைத்து காய வைப்பது போல் அத்தனை சுலபமானது அல்ல. ஆனால் துணியில் ஏற்பட்ட கறை நன்றாக துவைத்த பின், சுத்தமாவதைப் போல மனதையும் தெளிவாக்க முடியும்.
ஒரு வெள்ளைத் தாளை எடுத்து உங்கள் மனதை கஷ்டப்படுத்தும் விஷயங்களை வரிசையாக எழுதுங்கள். அதன் பின் அந்தத் தாளை எரித்து சாம்பலாக்கிவிடுங்கள்.
உள்ளே உறைந்து கிடக்கும் குப்பையான நினைவுகளை இப்படி அகற்றுவதன் மூலம் நாளாவட்டத்தில் அகத்திலும் துயர் நீங்கி மனம் புத்துயிர் பெறும்.
தினமும் யோகா அல்லது தியானம் செய்யத் தொடங்கினால், எதிர்காலத்தில் இது போன்ற எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் எவ்வித தன்முனைப்பும் இன்றி எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஏற்படும்.
அதைத் தினசரி ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
மன அழுத்தத்தை வளர விடாதீர்கள். அது உங்கள் பலத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் காலப்போக்கில் உங்களை முற்றாக பலவீனமாக மாற்றிவிடும்.
கவலைகள், பிரச்சினைகள் எந்தவொரு தனிநபருக்கு மட்டும் உரியதல்ல. உலகில் மானிடராய்ப் பிறப்பெடுத்த அனைவருக்கும் பொது வானது அவை.
ஆகவே, எதுவும் கடந்து போகும் என்கிற நிலைப்பாட்டில் மேற் கொண்டு வாழ்க்கைப் பாதையில் பயணத்தைத் தொடருங்கள்.
‘‘இனிது இனிது.
வாழ்தல் இனிது’’
நற்சிந்தனைகள் தொடரும்!
