12/22/2024

ஓருயிர்

ஷெய்க் நிஸ்ரா

இரவின் இருளையும், நிசப்தத் தையும் கலைத்தபடி அந்தப் பேரூந்து வளைந்து நெளிந்த பாதைகளினூடே பயணத்தைத் தொடர்ந்தது. பயணிகள் அனைவருமே ஆழ்ந்த உறக்கத்திலிருக்க, வயதான ஒரு பெரியவர் மட்டும் இருக்கையில் சாய்ந்தவாறே பலத்த சிந்தனையில் மூழ்கிப் போயிருக்கிறார்.யன்னலூடே அடிக்கடி இருளை வெறித்துக் கொண்டிருந்தவர் விழிகளில் நீர்த்திவலைகள் திரண்டு, அந்தக் காரிருளிலும் பளபளத்தன. சரியான நேரத்திற்கு ஊர் போய்ச் சேர்வோமா என்ற சந்தேகம் ஒருபுறம்.முப்பத்தைந்து வருடங்கள் கடந்த நிலையில், சொந்த மண்ணில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு மறுபுறம். பிறந்த மண்ணிலேயே தான் அன்னியமாக உணரப்பட்டு விடுவோமா என்ற அச்சம் இன்னொரு புறமுமாய் அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. சட்டென வெளியான பெருமூச்சொன்று பேரூந்தின் இரைச் சலில் மௌனமாக மறைந்தது.

மெதுவாகக் கண்கள் மூடிக் கொள்ள, இதயக்கதவு வேகமாகத் திறந்து கொண்டது.நினைவுப் பேழைக்குள் பொக்கிஷமாய் பூட்டி வைத்திருந்த கடந்த கால ஞாபகங்கள் மடை திறந்த வெள்ளமென மளமளவெனப் பொங்கி வழிய ஆரம்பித்தன.

அந்த சின்னஞ்சிறிய கிராமம் பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிமயமாகக் காட்சியளித்தது. ஒலிபெருக்கியின் ஒலியோடு, ஊர்மக்களின் பேச்சும் நகைப்பும் அரட்டைகளும் போட்டி போட்டுக் கொண்டு ஒலித்தன.ஊர்த்திருவிழாவுக்காக ஊரே ஒன்று திரண்டு, கேளிக்கை களியாட் டங்களில் ஈடுபட்டிருக்க, வாலிபர் கூட்டம் வழக்கமான கலகலப்போடு ஒருபக்கமும், வண்ண மயில்களென காரிகைகள் பட்டாம்பூச்சிகளாக இன் னொருபுறமும் வட்டமிட, சிட்டாகப் பறக்கும் சின்னஞ் சிறார்கள் உலகை மறந்து உவகைக் களிப்பில் திளைத்திருந்தனர். இவற்றை வேடிக்கைப் பார்த்தபடி தத்தம் வேலைகளில் கவனமாயிருக்கும் ஊர்ப் பெரியோர்கள் என ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.

வாலிபர் கூட்டத்தில் அவன் கலகலவெனப் பேசி எல்லோரையும் ஈர்த்துக் கொண்டிருந்தான். சராசரியை விட சற்றே உயரமான உருவம். அதற்கேற்றபடி கச்சிதமாய் பொருந்தும் உடல்வாகு. மாநிறத்துக்குச் சற்று குறைவான நிறம். பளீரென மின்னும் புன்னகை தனித்துவமாக அவனை அடையாளப் படுத்திக் காட்ட, அக்கிராமத்தில் கட்டிளங்காளையாகத் திகழ்ந்தான். ‘சங்கரன்’ தன் நற்குணம், நேர்மை, பணிவு, உதவும் மனப்பாங்கு என்பவற்றால் ஊர்மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தான்.நண்பர் குழாமோடு கும்மாளமிட்டுக் கழித்திருந்தாலும், அவன் விழிவண்டு களோ அங்குமிங்கும் அலைபாய்ந்து, ஒரு பூவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தன. சில நொடி நகர்வில் காரிகைக் கூட்டத்தில் தன்னவளைக் கண்டு கொள்ள பூரித்துப் போனான்.

அவள் அந்தக் கிராமத்தில் சற்று வசதியான குடும்பத்தில் பிறந்த ஒற்றைப் பெண். சிறுவயதில் தாயை இழந்து, தந்தையின் பாசப்பிணைப்பில் கட்டுக் கோப்பாக வளர்க்கப்பட்டவள். எல்லோராலும் ‘செல்லம்மா’ என அன்பாக அழைக்கப்படும் ‘செல்லா’வுக்கு அன்பும் அடக்கமும் தான் அடையாளங்கள். தோழியர் பேச்சுக்களைத் தலையாட்டி ரசித்தவளின் விழிகள் அவன் விழிகளைச் சந்திக்க, அவை ஆயிரம் கதைகள் பேசின.

எங்கே எப்போது எப்படி ஆரம்பித்ததெனப் புரியாத ஒரு இன்பத்தில் சிக்கித் தவித்தாள் அவள். எதேச்சையாக அங்குமிங்குமாக சந்தித்த சங்கரனின் பார்வையில் தன் இதயத்தைத் தொலைத்தவளானாள். பரிமாறிக் கொண்ட பார்வைகள் தம் இதயங்களையும் இடமாற்றிச் செல்ல, இவர்கள் காதலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.

‘கிரீச்’ என்ற சத்தத்துடன் பேரூந்து குலுங்கி நின்றபோது, பழைய ஞாபகங்கள் கலைந்து போக புரியாமல் விழித்த பெரியவரை, சக பயணியின் தகவல் ஆசுவாசப் படுத்தியது. இருளில் குறுக்கே வந்து விழுந்த ஏதோ ஒரு விலங்கைக் காப்பாற்ற வண்டி ஓட்டுனர் ப்ரேக் போட்டதைத் தெரிந்து படபடத்த இதயம் நிதானப்பட, நெஞ்சோடு அணைத்திருந்த பையிலிருந்த தண் ணீர் போத்தலில் சில்லென்றிருந்த குளிர்நீரைப் பருகியதும், அமைதியான மனதுடன் பார்வையை வெளியில் செலுத்த, பேரூந்து ஏதோ ஓர் அத்துவானக் காட்டைக் கடந்து ஆழ்ந்த இருளில் பயணித்துக் கொண்டிருந்தது. சில்லென்ற குளிர்காற்று இதமாக முகத்தில் மோதி, கிராமத்து மண் வாசனையை நாசியில் நிறைக்க, மூடிய இமைகளுக்குள் மீண்டும் கடந்தகால நினைவுகள் காட்சிப் படலங்களாக விரிந்தன.

சந்தர்ப்ப சூழ்நிலைகள் சங்கரன்- செல்லம்மாவுக்குக் களமமைத்துக் கொடுக்க, மௌன மொழிகளால் பேசியவர்கள் வார்த்தைகளையும் பரிமாறிக் கொண்டார்கள். அவன் தன் உள்ளக்கிடக்கையை அவளிடம் கொட்டிச் சம்மதம் கேட்க, அவளோ நாணிச் சிவந்து, தலை குனிந்து கால்விரல்களால் தரையில் கோலமிட, அதுவே அவள் சம்மதத்தைச் சொல்லா மல் சொன்னது.அதன் பின்னும் பல சந்திப்புகள் ஐந்தடி இடைவெளியில் தொடர்ந்தன.அவன் பேசப்பேச விழிகள் விரித்து தலை சாய்த்து ரசித்துக் கேட்பாள். பதிலுக்கு அவள் விழிகளே அவனுடன் மௌனமொழி பேசின.

மூடிய இமைகளை மீறிச் சிதறிய கண்ணீர்த்துளிகளை, மெலிந்து தளர்ந்து போன தன் கரத்தால் துடைத்தபடி சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டார் பெரியவர். பயணிகள் அதே உறக்கநிலையிலிருக்க, தெளிந்த மனதோடு மீண்டும் இருக்கையில் தலைசாய்த்துக் கொள்ள, வரண்டு போன அவர் உதடுகள் அவருக்கு மட்டுமே கேட்கும் தொனியில் ‘செல்லத்தாயீ’ என உச்சரித்தன. அந்த உச்சரிப்பில் உச்சந்தலை சிலிர்த்தது.

தாயில்லா செல்லம்மாவை தந்தை மிகப் பாசத்துடனும் பரிவுடனும் வளர்த்து வந்தார். தன் உயிரின் பாதியாகவே கருதினார்.’செல்லத்தாயீ’ நெகிழ்வாக அவர் அழைக்கும் ஒவ்வொரு முறையும், பாசத்தில் கரைந்தே போய்விடுவாள். சங்கரன் கூட அவளைத் தன்னுயிராய் கருதுவதாலோ என்னவோ, அவனும் அவளை ‘செல்லத்தாயீ’ என்றே அழைத்தான். அப்போதெல்லாம் அவளின் விழிகள் பனிப்பதைப் பார்த்திருக்கிறான்.

துக்கமும் ஏக்கமும் ஒருங்கே இயலாமையின் பலவீனத்தோடு, நெடிய பெருமூச்சொன்றை வெளிப்படுத்தியது. கிராமங்களில் காதல், சந்திப்புகள் எல்லாம் குதிரைக்கொம்பான நிலை யில், ஐந்தடி இடைவெளியில் பார்வைப் பரிமாற்றங்களும், அவன் ஐந்து வார்த்தைகள் பேசினால் ‘ம்’ என்ற ஒற்றை வார்த்தையுடன் நகர்வதும் அவர்களுக்குரிய சந்தோஷக் கணங்கள். நினைத்தது எல்லாம் இறையருளால் இனிதே நடக்கும் என்ற நம்பிக்கையில் சிட்டாய் சிறகடித்துக் கொண்டிருந்தவனுக்கு அந்த ஒரு சந்திப்பு பேரிடியாகவும், இறுதியாகவும் இருக்குமெனக் கனவிலும் நினைத் திருக்கவில்லை.

வழமைக்கு மாறாகத் தோழிய ரோடு வழமையாக சந்திக்கும் இடத் திற்கு அவள் வந்திருந்தாள். சோகம் அப்பிய முகத்துடன் வந்திருந்தவள், நிறைய அழுதிருப்பாள் எனத் தோன்றியது. அவன் உயிருக்குள் ஏதோ ஓர் இனம்புரியாத வலி ஊடுருவிச் சென்றது. முதல்முறையாக இதழ் திறந்து நிறையப் பேசினாள். தான் பிறந்தது முதல் தன்னை வளர்க்க ஒற்றை ஆளாக தந்தை பட்ட கஷ்டங்களையும், தன் எதிர்காலத்தின் ஒவ்வொரு கணமும் அவரின் கனவாக இருந்ததென்பதையும், அவள் பிறந்த போதே அவளுக்கு மாமன் முறையான ஒருவனுக்கு நிச்சயித்துத் தீர்மானம் செய்யப்பட்டிருந்ததையும், தன் தந்தை சொல்லச் சொல்ல பூமி கால்களுக்குக் கீழ் நழுவுவதை உணர்ந்தவள் பதறிப் போனதையும் சொன்னாள்.ஆயினும் தந்தையின் வாக்கு தன் வாழ்க்கையை விட முக்கியமானது எனவும், அவரை எதிர்த்து எந்தவித முடிவும் எடுக்க முடியாத கையறு நிலையில் தானிருப்பதாகவும் அழுகையினூடே திக்கித் திணறி அவள் விவரித்தபோது, அவனும் உருகிப் போய் ஊமையாக நின்றான். தன்னுயிரைச் சிதைக்கும் வார்த்தைகளை அவளால் எப்படிக் கோர்வையாகப் பேச முடிந்ததோ எனக் கலங்கித்தான் போனான்.

கிராமப்புற விழுமியங்களோடு விழுதூன்றிப் போன அந்தப் பேதைப் பெண்ணின் வார்த்தைகளுக்கு மறு வார்த்தை பேச அவன் தாய்மொழி கூட இசையவில்லை.வார்த்தைகளை வெளியிடத் தயங்கிய அவன் உதடுகள் ஒரு வெற்றுப் புன்னகையை உதிர்க்க, அதுவே அவளுக்கு ஆயிரம் அர்த்தங்களைப் புகட்டிச் சென்றது. அவள் உள்ளுக்குள் நொறுங்கி, சில்லுச்சில்லாகச் சிதறித்தான் போனாள். கண்ணீரோடு திரும்பிச் சென்றவள் சில அடிகள் நடந்து திரும்பி நின்று நிதானித்து, அவனைப் பார்த்துச் சொன்னாள் ‘ஒன்ன இப்படி என்னால பார்க்க முடியல.தயவு செஞ்சி ஏடாகூடமா ஏதும் முடிவு எடுக்காத. ஒன்னக் கும்பிட்டுக் கேட்டுக்கிறேன்.எங்கேயோ நீ உயிரோட இருப்பே னு நெனைப்போட வாழ்ந்துக்குவேன்.ஆனா, உனக்கேதும் ஆச்சு ன்னா அடுத்த நிமிஷம் என் உசுரும் போயிடும். இப்போ மட்டுமில்ல,எப்பவும் தான்.இது சத்தியம் ‘ அவளின் இறுதி வார்த்தைகள் கண்ணீரில் கரைந்து காற்றோடு கலந்து, அவன் நாடி நரம்பெங்கும் ஊடுருவிச் செல்ல அவள் வார்த்தைகளே அவன் வாழ்க்கையானது.

‘செல்லத்தாயீ நீ சந்தோஷமா வாழனும். பூவும் பொட்டுமா நீண்ட ஆயுசோட வாழனும். அது போதும் எனக்கு.’ முப்பத்தைந்து நீண்ட வருடங்கள் தன்னையே ஏமாற்றிக் கொண்டு, ஏதோ ஒரு வீறாப்பில்… மறக்கப்பட வேண்டும் என நினைக்கும் நிகழ்வுகள் மறக்கப் படாமலேயே, கனவாகிப் போன வாழ்க்கையின் ஞாபகங்கள் சுகமான சுமைகளாக அவன் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது.

அவளுடனான அந்த இறுதிக் கணங்கள், நரகமாகி நகர மறுத்தாலும் அவைதான் அவன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

பிறந்து வளர்ந்த ஊரையும், உறவுகளையும்,நண்பர்களையும் விட்டு நகரம் நோக்கி நகர்ந்தான். புதிய ஊர், புதிய வாழ்க்கை, அறிமுகமற்ற முகங்கள் எனப் பழகி அறிமுகங்களால் உறவாகி, வழக்கமற்ற பழக்கங்கள் பின்னாளில் பழகிப் போயின.எத்தனை எத்தனை மாற்றங்கள், இந்த நீண்ட இடைவெளியில்… ஒன்றைத் தவிர. அது அவளின் ஞாபகங்கள். அவைதான் அவனை உயிராக இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

மீண்டும் தான் பிறந்த மண் ணுக்குப் போக வேண்டும் என்றோ, அவளை சந்திக்க வேண்டுமென்றோ அவன் நினைத்ததேயில்லை. ஆனால், சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் திடீரென விழிப்பு வந்ததும், நெஞ்சில் ஏதோ ஒரு வலி உண்டானதும் கண்ணுக்குப் புலப்படாத இரு கரங்களால் நசுக்கப் படுவதைப் போல் உணர்ந்ததையும் வெறும் பிரமையென அற்பமாக அவனால் ஒதுக்க முடியவில்லை. உறங்கிக் கிடந்த பழைய நினைவுகள் விழித்து, உயிரைப் பறிப்பதாக உணர்ந்தான். ஏதோ விபரீதம் நிகழப் போவதாக உள்ளுணர்வு சொல்ல, அடிமனதில் புதைத்து வைத்த ஆசைகள் பேராசை யாகி அசுரத்தனமாக அவனை ஆட்டிப் படைக்க ஆரம்பித்தன. ஒரே ஒருமுறை அவளை எட்ட இருந்தாவது பார்த்து விடவேண்டும் என்ற உந்துதல், தனக்குத் தானே போட்டுக் கொண்ட வேலி தாண்டி, தள்ளாத வயதிலும் இப்பயணத்தைத் தொடங்க வைத்தது. இத்தனை வருட வாழ்விலும், இந்த இரவு மட்டும் விடியாமலேயே ஏன் இன்னும் நீண்டு கொண்டிருக்கிறதோ? எப்படியும் விடியும் வேளை ஊரைச் சேர்ந்து விடலாம் எனும் நினைப்பு துயரங்களையும், சோர்வையும் தூக்கித் தூரப் போட்டது.

ஒருநாளுமில்லாத திருநாளாய் என்னாயிற்று இன்று? இரவு உண வுக்குப் பின் வழக்கமான பத்து நிமிட நடையுடன் தூக்கம் கண்ணைச் சுழற்றுமே! இன்று ஏன் தூக்கம் இமைகளைத் தழுவ மறுக்கிறது? தலையில் ஏதோ கிறுகிறுக்க ,அந்த அழகிய கிராமத்தில், பெரிய வீட்டின் வசதியான அறையொன்றில், உறக்கம் வராமல் போராடிக் கொண்டிருக்கிறாள் செல்லத்தாயி. மகன், மருமகள், பேரக் குழந்தைகளென கூட்டாக வாழ்ந்தா லும் தனிமை விரும்பி அவள்.குடும்ப விசேசங்களின் போதும் அவள் ஒதுங்கியே இருப்பாள். தன் சாம்ராஜ்யமாகக் கருதும் தன் அறையில் இருப்பதையே விரும்புவாள். பறவையொன்று தன் கூட்டுக்குள் எவ்வளவு குதூகலமாக இருக்குமோ அதே உணர்வுடன் அவளும்….

உணர்வுகளோடு போராடிப் போராடி இளமைக் காலத்தைத் தொலைத்தவளுக்கு இப்போது உடல் தளர்ந்து, உள்ளம் சோர்ந்து போய் கிடக்கிறது. இனிப் போராடத் தெம்பில்லை. மூப்பின் பலவீனங்களோடு மட்டுமே இப்போது போராட்டம். இன்று ஏனோ பழைய ஞாபகங்கள் அவளை வாட்டி வதைத்துக் கொண்டிருக்க,அந்த இளமை உணர்வுகள், அதனால் ஏற்பட்ட வலிகள், அன்பு நிறைந்த ஓரிதயத்தை துண்டாக்கிச் சிதறடித்த நினைவுகளுமாக உறுத்தலாக இருந்தது. தான் மட்டும் சிறந்த ஒரு மகளாக, தந்தையின் கனவுகளை நிறைவேற்றியதும், யந்திரத்தனமான இல்லற வாழ்வில், மகனின் பிறப்பால் சற்றே மாற்றம் உண்டானதும், தனக்காகவே அர்ப்பணிப்புடன் வாழ்ந்த தந்தையின் மறைவும் அதன் பின் வாழ்வில் தோன்றிய துன்பங்களை மறந்து மகனைச் சிறப்பாக வளர்த்து ஆளாக்கி, அவன் மனம் விரும்பியவளைக் கைப்பிடித்துக் கொடுத்து,நோய்வாய்ப்பட்ட கணவனின் கடமைகளை முகம் கோணாமல் செய்து, அவரின் இழப்பையும் தாங்கி,. அத்தனையும் தாண்டி எப்படி வாழ்கிறேன் எனப் புரியாவிட்டாலும், தைரியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழும் இவ்வாழ்க்கை… எல்லாமே காட்சிகளாக விரிய அவள் கண்களில் கண்ணீர்.

அதையெல்லாம் தாண்டி உயிரில் எழுதிய முதற்காதலின் வலி இன்னும் இதயத்தில் ரணமாக… முப்பத்தைந்து வருடங்கள் அடிமனதில் நீறுபூத்த நெருப்பாக மறைத்து வைத்த சங்கரனின் நினைவுகள் இன்று இதயத்தைச் சுட்டது. ஒருமுறை கூட அவன் ஊருக்கும் வரவில்லை. சந்திக்கவும் முனையவுமில்லை. எங்கிருக்கிறான், எப்படி யிருக்கிறான்? திருமண வாழ்க்கை எப்படிக் கழிந்திருக்கும்? பிள்ளைகள், பேரக்குழந்தைகளோடு குதூகலித்திருப் பானா? விபரங்கள் அறியவும் முடியாமல், பேதைமனம் குழப்பத்தில் ஆழ்ந்தது.

ஒரே ஒருமுறை அவன் முகங் காண ஆவல் கொள்ள… இருளரக்கனின் ஆதிக்கத்திலிருக்கும் நடுநிசியில், முதுமை யின் தளர்ச்சியும், உணர்வுகளின் தாக்கமும் ஒன்று சேரக் கொஞ்சம் கொஞ்சமாக சோர்ந்து போகிறாள். தாகத்தில் நா வரள, அருகிருக்கும் நீர்க்குவளையைக் கையிலெடுக்கக் கூட தெம்பின்றி,கைகால்கள் உணர்விழந்து போக, பார்வையும் தெளிவின்றி எங்கோ அழைத்துச் செல்லப்படுவதைப் போல்,அவசரமாகப் புறப்பட வேண்டும் போலொரு உந்துதல். இத்தனையிலும் அவள் சிந்தனை மட்டும் தெளிவாக இருந்தது. மங்காத அவன் முகம் அவள் கண்களில் நிழலாட ‘செல்லத்தாயீ‘ ஈனஸ்வரத்தில் அவன் குரல் மிக மிக அருகில் ஒலிக்க, அது கனவா நனவா எனப் புரியாமல் அவளுதடுகள் எதையோ முணுமுணுக்கின்றன. ‘என்னை மன்னிச்சிடு சங்கரா’ வார்த்தைகள் வெளிவரவில்லை. இமைகளும் திறந்த படியிருக்க உயிர் காற்றோடு கலந்து மறைந்தது.

பொழுது நன்றாகப் புலர்ந்து விட்டது. ரம்மியமான அந்த விடியல் பொழுதை ரசித்தவாறே ஒவ்வொரு பயணியாகப் பேரூந்திலிருந்து இறங்க, சங்கரனோ இருக்கையில் சாய்ந்தவாறே சற்றே தலை சரிய, ஆழ்ந்த உறக்கத் திலிருந்தார். நடத்துனர் அவர் அருகில் வந்து ‘ஐயா! ஊர் வந்தாச்சு. எந்திரிங்க’ எனத் தொட்டெழுப்ப மீளாத்துயிலில் ஆழ்ந்த அவருடல் சரிந்தது.

எந்தவொரு பந்தத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத சங்கரன் ஒண்டிக்கட்டையாகவே அவரின் இறுதி நாள் வரை அவரின் ‘செல்லத்தாயீ‘ நினைவுகளுடன் வாழ்ந்து முடித்திருந்தார். ஒருமுறை அவளைப் பார்த்தால் போதுமென பிறந்த மண்ணை நோக்கிப் புறப்பட்டு வந்தவர் கடைசியில் அவளைப் பாராமலேயே மண்ணில் கலக்க, அவரின் உயிரோ, அன்புக் குரியவளின் உயிரோடு சங்கமித்து விட்டது. உடல்கள் அழியலாம்.உறவுகள் பிரியலாம். அன்பு கொண்ட ஆன்மாக்கள் உலகம் உள்ளவரை உயிர்ப்புடன் இயங்கும். வாழ்வில் இணையமுடியா இரு உயிர்கள் மரணத்தில் இணைந்து ஓருயிர் ஆனது.

One thought on “ஓருயிர்

  1. அருமை …
    ஆழமான கருத்தை அழகிய உரைநடையில் சொல்லியவிதம் அருமை …

Comments are closed.