மார்ச் – ஏப்ரல் 2023
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்!
காலம் மற்றும் அனுபவங்களைப் போல் சிறந்த ஆசான்கள் எவருமில்லை.ஆகவே, காலம் தரும் அனுபவப் பாடங்களைக் கற்று, வாழ்க்கையில் உயர்ந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வது அவசியமாகிறது. தவிர்க்கவியலாத சில காரணங்களால் இந்த மகளிர் சிறப்பிதழ் சற்று தாமதமாகவே உங்களை வந்து சேர்ந்துள்ளது.
மகளிர் என்றாலே எதையும் தாங்கக்கூடிய மனவலிமை பெற்றவர்கள்.அவர்களைக் கொண்டாட ஒரு தினம் ஒதுக்கப் பட்டிருந்தாலும் அவர்கள் பாரிய சவால்களை எதிர்கொள்டு போராடி வருபவர்கள். அதிலும் சில பெண்களே பெண்களை இழிவு படுத்தும் சந்தர்ப்பங்களையும் நாம் அவதானித்திருப்போம். அவர்களின் தாக்குதல் சில நேரங்களில் மறைமுகமாகவும் இருக்கும். நட்பிலும் உறவிலும் பலருக்கிடையில் புரிந்துணர்வின்மையை ஏற்படுத்தி பாரிய விரிசல்களுக்கும் வழிகோலும். அதனால் அவர்களை அடையாளம் கண்டு தவிர்த்து விட்டுக் கடந்து செல்வது, அவசியமற்ற பிரச்சினைகள், மன அழுத்தங்கள் போன்றவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.
வலிகள்,தடைகள்,எதிர்ப்புகளைத் தாண்டி சாதனைகள் புரிபவர்கள் பெண்கள்.விதிவிலக்காக மேற்குறிப்பிட்ட ரீதியில் சிலர் இருப்பதும் வியப்பில்லை. முன்னேற்றப் பாதையில் விமர்சனங்கள் வருவது இயல்பே! அதைக் கருத்திற் கொள்ளாமல் புறந்தள்ளி எம் இலக்கை நோக்கிப் பயணிப்பதே அறிவுபூர்வமானது. அதுவே வெற்றிகளைத் தரக்கூடியது.
‘‘உட்கார முடியாத ஒருவன் உன் நாற்காலியை ஒளித்து வைத்திருப்பான். தேடிக் கைப்பற்று’’ – கவிப்பேரரசு வைரமுத்து
அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!