12/22/2024

மின்னிதழ் 8

மின்னிதழ் / கவிதை

மேலேயுள்ள செப்டம்பர் – அக்டோபர் 2021 அட்டைப்படத்தில் சுட்டினால் அல்லது டச் செய்தால் இதழ் Download ஆகும். படித்து கருத்துகளைச் சொல்லவும். நன்றி!

வறுமையின் பசி

வேலையின்றி வீடடைந்த வேளையில் கல்விச்
சாலையீந்த சத்துணவிலும் சங்கடங்கள் சூழ்ந்தது
உலை கொதிக்கின்ற நீர்க்குமிழிப் போலவே
கொலைப் பசியாலே வயிறெல்லாம் எறிந்தன…

தீநுண்மி தீண்டலில் சுட்டெரித்த உடலிலும்
தீராப் பசிப்பிணி எரித்தயுயிர் ஏராளம்
திக்கெட்டும் இயல்பு வாழ்க்கை முடங்கவே
திரண்ட மக்களோடு மாக்களுந்தான் வாடின…

வருமானம் வருவழிகள் அடைந்ததால் உற்றதொரு
பெருஞ்சேமிப்பு திறமெல்லாம் தடயமின்றி போனது
அருகிலிருந்த அடிசிலால் உயிர்கள் உதரம்
சுருங்கி இறையளித்த விதிகடிந்து கொண்டன

தாய் மாண்ட சேதியறியாமல் கரமிரண்டால்
சேயிழுத்த கையறு நிலையிங்கே சூழ்ந்தது
நாய் சடலமுண்டு பசிதீர்க்கும் பஞ்சத்தால்
காயங்காக்கும் வழியின்றி பல்லுயிரும் மாண்டன

சிரமுயர்த்தி போதிக்கும் ஆசானும் பனை
மரமேறி பிழைப்பு நடத்தும் நிலையானது
இரப்போர்க்கு இரவல் வழங்குவதில் முரண்பட்ட
ஈரமில்லா மிருகங்கள் மட்டுமிதில் தப்பின

விருதை சசி
விருதுநகர்.

One thought on “மின்னிதழ் 8

Comments are closed.